
கோலாலம்பூர், நவம்பர் 13 – Microsoft நிறுவனத்தின் அவுட்லுக் (Outlook) மின்னஞ்சல் சேவையில் ஏற்பட்ட கோளாறால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் Outlook, Microsoft 365, SharePoint உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் பயனர்கள் சிரமமடைந்தனர். Microsoft Teams மற்றும் Copilot சேவைகளிலும் சில பாதிப்புகள் ஏற்பட்டன.
Downdetector இணையதளத்தின்படி, ஒருகட்டத்தில் சுமார் 1.30 லட்சம் பயனர்கள் அவுட்லுக் சேவையில் ஏற்பட்ட கோளாறு குறித்து புகார் அளித்துள்ளனர்.
நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கணினி சேவையகங்களில் அதிகப்படியான சுமை ஏற்பட்டதே இதற்குக் காரணம் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சேவைகளை மீண்டும் வழக்கமான நிலைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டது.



