
பாகான் டத்தோ, நவம்பர்-13,பேராக், பாகான் டத்தோவில், மீன்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தடம்புரண்டதில், ஏராளமான மீன்கள் சாலையில் விழுந்துச் சிதறின.
ஹூத்தான் மெலிந்தாங், கம்போங் கோத்தா அருகே, சபாக் பெர்ணாம் நோக்கிச் செல்லும் சாலையில், நேற்று மாலை மணி 6.40 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
லாரியின் இடதுபுறப் பின் டயர் கழன்று விழுந்ததால், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
39 வயது லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் வேறு எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை.
பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படவில்லை என பாகான் டத்தோ மாவட்டப் போலீஸ் கூறியது.
சாலையில் சிதறிக் கிடந்த மீன்களால் மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பாய்ச்சி சாலையைச் சுத்தம் செய்தனர்.
விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடருகிறது.



