
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-13,பினாங்கு, பெர்மாத்தாங் பாவ்வில் போலீஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கிக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், 2 பெண்கள் உட்பட 4 பாகிஸ்தானியர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
23 முதல் 36 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதாகப் பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, Jalan Samagagah-விலுள்ள பெட்ரோல் நிலையம் அருகே, 43 வயது போலீஸ் அதிகாரியைச் சந்தேக நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக நம்பப்படுகிறது.
பின்னர், அவரிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதில் சுமார் பத்தாயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் பொது மக்களிடம் நன்கொடை கேட்பதுபோல் அணுகி, பின்னர் கொள்ளையில் ஈடுபடுவது அக்கும்பலின் யுக்தி என போலீஸ் தெரிவித்தது.
கைதான நால்வரும் நவம்பர் 17-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை தொடருகிறது.



