
கோலாலம்பூர், நவம்பர்-13,பாகிஸ்தானில் இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 130 மலேசியர்கள் கைதுச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், புக்கிட் அமான் போலீஸ் சிறப்பு விசாரணைக் குழுவை அந்நாட்டுக்கு அனுப்பவுள்ளது.
வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா இதனைத் தெரிவித்தார்.
அக்டோபர் 13-ஆம் தேதி, ராவல்பிண்டி நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த 130 பேரும் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களில் 59 பேர் சபாவையும், 57 பேர் சரவாக்கையும் சேர்ந்தவர்கள்.
எஞ்சியவர்கள் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைதானர்களில் 107 பேர் விசா காலாவதியான பின்னரும் பாகிஸ்தானில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், 92 பேருக்கு மலேசியாவில் குற்றப் பதிவுகள் இல்லை என்றும், இருவர் சபாவில் மோசடி வழக்குகள் தொடர்பில் போலீஸாரால் தேடப்படுபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியர்களைக் குறிவைத்து வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடத்தியதாக அந்தக் கும்பல் சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட மின்னியல் சாதனங்களை ஆய்வு செய்வதுடன், மலேசியர்களைப் பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றவர்களையும் அடையாளம் காண விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.



