Latestமலேசியா

நஜிப்பின் மன்னிப்பு விண்ணப்பத்தை மன்னிப்பு வாரியத்திடம் கொண்டு சென்றது ஏன்? அன்வார் விளக்கம்

அலோர் காஜா, நவ13-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மன்னிப்பு விண்ணப்பத்தை 2023-ஆம் ஆண்டு மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கத் தாம் எடுத்த முடிவு குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கமளித்துள்ளார். அந்த முன்னாள் பிரதமரின் அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்படக்கூடாது என்பதற்காகவே தாம் அவ்வாறு செய்தாக அவர் தெரிவித்தார்.

கூட்டரசு அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு கைதிக்கும் மாமன்னரிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பிக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையைத் தடுப்பது, சம்பந்தப்பட்ட நபரின் உரிமைகளை மறுப்பதற்குச் சமமாகும் என அன்வார் சுட்டிக் காட்டினார்.

ஒரு பிரதமராக, யாருக்கும் அநீதி இழைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நஜிப்பின் விண்ணப்பத்தை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்காமல் இருந்திருந்தால், அது அவரது உரிமையை மறுத்ததாக ஆகியிருக்கும் என நேற்று Taman Melaka Perdanaவில் நடைபெற்ற ‘Pesta Melaka, Rumah Kita’ நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.

தமது அந்நடவடிக்கை, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சமரசம் செய்து கொண்டதாகக் கருதும் சில தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விண்ணப்பத்தைப் பரிசீலனைக்குச் சமர்ப்பிப்பதே பிரதமரின் பொறுப்பு; மன்னிப்பு வழங்குவது தொடர்பான இறுதி முடிவு மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என தெளிவுபடுத்தினார். மேலும், விண்ணப்பப் பரிசீலனைக்காக மருத்துவ அறிக்கைகள், சிறைச்சாலை ஆவணங்கள் மற்றும் நன்னடத்தை மதிப்பீடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது நடவடிக்கை ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு துணைபோவதாக அர்த்தப்படாது. சட்டவிரோத நடவடிகைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித இணக்கப் போக்கும் இருக்காது என அன்வார் மீண்டும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!