
வாஷிங்டன், நவ.13-வீடியோ பதிவுகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி, கடந்த 18 மாதங்களில் 400 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (1.63 பில்லியன் ரிங்கிட்) அதிகமான கிரிப்டோகரன்சியை வட கொரிய அரசின் ஆதரவு பெற்ற ஊடுருவல்காரர்கள் திருடியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய குற்றப்புலனாய்வுத்துறையான FBI தெரிவித்துள்ளது.
FaceStealer எனப்படும் இம்மோசடியில், ஊடுருவல்காரர்கள் தெரிந்தவர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, Zoom, Microsoft Teams, Google Meet ஆகியவை போன்ற போலி செயலிகள் மூலம் வீடியோ அழைப்புகளில் மக்களைப் பங்கேற்க வைக்கும் யுக்தியைக் கையாளுகின்றனர். அதற்காக சம்பந்தப்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகளையும் தகவல் தொடர்புத் தளங்களையும் ஏற்கெனவே ஊடுருவி, அவர்களை ரகசியமாகப் பதிவு செய்கின்றனர்.
வீடியோ அழைப்பின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, அதனைச் சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட இணைப்பை அழுத்துமாறு பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். ஆனால், அந்த இணைப்பில் இருக்கும் சில அம்சங்கள் பாதிக்கப்படுவோரின் கணினிகளைப் பாதித்து, சமூக ஊடகக் கணக்குகளை ஊடுருவல்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள உதவுவதாக FBI விளக்கியுள்ளது. பின்னர், கைப்பற்றப்பட்ட தொடர்புப் பட்டியலைப் பயன்படுத்தி மேலும் பலரை அவர்கள் அதே முறையில் ஏமாற்றி வந்ததும் கண்டறியப்பட்டது.
விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொந்தமான 900-க்கும் மேற்பட்ட வெப்கேம் வீடியோ பதிவுகளை அடையாளம் கண்டு கைப்பற்றியுள்ளதாக FBI தெரிவித்துள்ளது. அதோடு, கிரிப்டோகரன்சி மற்றும் blockchain துறைகளில் உள்ள முக்கிய நபர்களைப் போல போலி வீடியோக்கள் அல்லது ‘Deepfake’ உருவாக்க ஊடுருவல்காரர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் FBI எச்சரித்துள்ளது.
இத்தகைய இணைய மோசடிகளுடன் ‘Sapphire Sleet’ அல்லது UNC1069 எனப்படும் வட கொரிய ஊடுருவல் குழுவை FBI தொடர்புபடுத்தியுள்ளது. அண்மையில் Binance கிரிப்டோகரன்சி தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தப்பட்ட வட கொரிய ஊடுவல் குழு அதுவல்ல என்றும் கூறப்படுகிறது. அந்த இணையத் தாக்குதலில் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர் (25.67 பில்லியன் ரிங்கிட்) இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



