
சுங்கை பூலோ, நவ.14 -சுங்கை பூலோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,500 குடும்பங்களுக்கு, மனிதவள அமைச்சகமும் மனிதவள மேம்பாட்டுக் கழகமும் (HRD Corp) இணைந்து சுமார் 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான உதவிகளை வழங்கின.
ஜாலான் பாயா ஜாராஸ் தெங்காவில் உள்ள அஸ்தானா ஏரா மேவா மண்டபத்தில் நடைபெற்ற ‘சந்துனி மடானி காசி’ திட்டத்தின் தொடக்க விழாவில், மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த உதவிகளை வழங்கினார்.
பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களுடன் 625 ரிங்கிட் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கம்போங் மெலாயு சுபாங், கம்போங் குபு காஜா, கம்போங் பாயா ஜாராஸ் ஹிலிர், கம்போங் மெர்பாவ் செம்பாக், கம்போங் சுங்கை பெலோங் மற்றும் கம்போங் பாயா ஜாராஸ் தெங்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தன.
தொடர்ந்து 16 நாட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்ட இழப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த உதவி சிறியதாக இருந்தாலும், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் என ரமணன் தெரிவித்தார். உதவிகள் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைவதைத் தமது அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2,500 ரிங்கிட் சிறப்பு ரொக்க உதவியை அறிவித்துள்ளதை ரமணன் சுட்டிக்காட்டினார்.
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கிப் பதிவு செய்தவர்களுக்கு மாநில அரசின் சார்பில் 500 ரிங்கிட் உதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுங்கை பூலோவில் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, 1 கோடியே 20 லட்சம் ரிங்கிட் செலவில் தற்காலிக நீர்த்தேக்கக் குளம் அமைக்கப்படவுள்ளதாகவும் ரமணன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் HRD Corp தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமது ஷமிர் அப்துல் அசிஸும் கலந்துகொண்டார்.



