
டெக்சஸ், நவம்பர்-15,விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, இலோன் மாஸ்கின் SpaceX நிறுவனம், விண்ணிலிருந்து திரும்பிய தனது Starship விண்கலத்தை நடுவானிலேயே பிரம்மாண்ட இயந்திரக் ‘கைகள்’ மூலம் வெற்றிகரமாகப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ராக்கெட் அமைப்பான Starship-ப்பின் 15-ஆவது சோதனைப் பயணத்தின் போது இந்த வரலாற்றுச் சாதனை சாத்தியமானது.
22 மணி நேரப் பயணத்தில் பூமியை 14 முறை சுற்றி வந்த இந்த விண்கலம், 26 Starlink இணையத் துணைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியது.
பின்னர் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து கடும் வெப்பத்தைத் தாங்கித் திரும்பிய விண்கலம், அமெரிக்காவின் டெக்சஸில் உள்ள ஏவுதளத்தில் Mechazilla என அழைக்கப்படும் இயந்திரக் கைகளுக்குள் துல்லியமாக இறங்கிப் பிடிக்கப்பட்டது.
இயந்திரக் கைகளுக்கு இடையே விண்கலம் தொங்கும் வீடியோவைத் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள இலோன் மாஸ்க், விண்கலம் மிகச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டதுடன் SpaceX குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முழுமையாக மறுபயன்பாடு செய்யக்கூடிய ராக்கெட் அமைப்புகளை உருவாக்குவதற்கான விண்வெளித் துறையின் பல தசாப்த கால முயற்சியில் இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இது விண்வெளிப் பயணச் செலவுகளைக் கணிசமாகக் குறைப்பதுடன், அடிக்கடி ராக்கெட்டுகளை ஏவுவதையும் சாத்தியமாக்கும்.
இத்தொழில்நுட்பத்தை வெகுவாகப் பாராட்டியுள்ள அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, வருங்காலத்தில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டங்களுக்கு இது பெரும் உத்வேகத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.



