Latestமலேசியா

கோவிட்-19 நெருக்கடி நிர்வாகம் குறித்த ஆய்வு: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு முனைவர் பட்டம்

கோலாலம்பூர், நவ.16-மலேசியாவின் ஒன்பதாவது பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் சப்ரி யாகோப், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாட்டை நிர்வகித்த அனுபவம் குறித்த ஆய்வுக்காக, இன்று யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியாவின் (UUM) 39-வது பட்டமளிப்பு விழாவில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார்.

Mu’adzam Shah மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், கெடா மாநில ராஜா மூடா Tengku Sarafudin Badlishah, இஸ்மாயில் சப்ரிக்கு பட்டத்தை வழங்கினார். முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்ற 451 பேரில் இஸ்மாயில் சப்ரியும் ஒருவராவார்.

அவரது ஆய்வறிக்கையின் தலைப்பு “நெருக்கடி நிர்வாக மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக் கொள்கை 2020–2022: கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் மலேசியாவின் வியூகம்” என்பதாகும். பெருந்தொற்று காலத்தில் மலேசியா மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தேசியக் கொள்கை முடிவுகள் குறித்து அந்த ஆய்வில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

அவர் மூத்த தற்காப்பு அமைச்சராகவும், பின்னர் துணைப் பிரதமர் மற்றும் தற்காப்பு அமைச்சராகவும் பணியாற்றிய காலத்தையும், 2021 ஆகஸ்ட் முதல் 2022 அக்டோபர் வரை நாட்டின் பிரதமராகப் பொறுப்பு வகித்த காலத்தையும் அந்த ஆய்வு உள்ளடக்கியிருக்கிறது. பேராசிரியர் Dr. Rusdi Omar மற்றும் இணைப் பேராசிரியர் Dr. Che Mohd AZIZ Yaacob ஆகியோரின் மேற்பார்வையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற இஸ்மாயில் சப்ரி, 1985-ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். பின்னர் இளைஞர் மற்றும் விளையாட்டு, உள்நாட்டு வாணிகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறை, விவசாயம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பொறுப்புகளை வகித்ததுடன், 2021 முதல் 2022 வரை நாட்டின் ஒன்பதாவது பிரதமராகவும் இருந்துள்ளார்.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள முனைவர் பட்டம், அவரது நீண்டகாலக் கல்வி மற்றும் பொது வாழ்க்கைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. பட்டமளிப்பு விழாவில் UUM துணைவேந்தர் பேராசிரியர் Dr. Ahmad Martadha Mohamed, பல்கலைக்கழக இயக்குநர் குழு உறுப்பினர் Dato Muhamad Khizri Abu Kassim உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!