
பினாங்கு, நவம்பர் 16 – தஞ்சோங் பூங்கா (Tanjung Bungah) கடற்பகுதியில் விண்ட்சர்ஃபிங் (Windsurfing) விளையாட்டில் ஈடுபட்டபோது மாயமான 74 வயது மருத்துவர் டாக்டர் காவ் சூன் செயின் (Dr Khaw Chun Sein), இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலம் காலை 9.56 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் குவே (Straits Quay) அருகிலுள்ள கடற்கரைப் பாறைகளில் கண்டெடுக்கப்பட்டது.
மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் தலைமையில், தீயணைப்புத் துறை, போலீசார் மற்றும் குடிமைத் தற்காப்புப் படையினர் இணைந்து இரண்டாவது நாளாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
ஏழு படகுகள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உதவியுடன் சுமார் 94.76 கடல் மைல் பரப்பளவில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவக் குழுவினர் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.



