
கோலாலம்பூர், நவம்பர் 17 – பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சமூக நலத்துறை அதாவது JKM தன்னார்வலர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உதவித்தொகை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த உதவித்தொகை தன்னார்வலர்களின் சேவையை அங்கீகரிப்பதுடன், மேலும் பலரை இப்பணிகளில் ஈடுபட ஊக்குவிக்குமென மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி (Datuk Seri Nancy Shukri) தெரிவித்தார்.
இதற்கிடையில், பேரிடர் காலங்களில் பணியாளர்கள் சோர்வடைவதைத் தவிர்க்க, அவர்களை மாற்றி மாற்றிப் பணியில் ஈடுபடுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் இருந்து கூடுதல் பணியாளர்கள் அனுப்பப்படுவர்.
மேலும், 2026 மற்றும் 2027 வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகளுக்காக 77.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 8,180 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஹோட்டல்களில் அல்லது உறவினர்களின் வீடுகளில் தங்கினாலும், முறையாகப் பதிவு செய்திருந்தால் Bantuan Wang Ihsan உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



