
கோலாலம்பூர், நவ. 18 — பத்துமலையில் கொட்டும் மழைக்கு நடுவே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் அவரது துணைவியார் பிரிஜிட்டும் 272 படிகளை ஏறிச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலுக்குச் செல்லும் படிகளில் மக்ரோன் தம்பதியருடன் பாதுகாப்புப் பணியாளர்களும் அதிகாரிகளும் ஏறிச் செல்வதைக் காணொளியில் காணலாம். உடன் வந்தவர்கள் இருவரையும் மழையிலிருந்து காக்க முயல, தம்பதியர் தொடர்ந்து படியேறிச் செல்லும் காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கனமழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கோயிலுக்குச் சென்றதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சுண்ணாம்புக் குன்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பத்துமலை, மலேசியாவின் புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் தலங்களில் ஒன்று. ஆண்டுதோறும் தைப்பூசத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏறும் அதே படிகளை, மக்ரோன் தம்பதியரும் தங்களது மலேசியப் பயணத்தின்போது ஏறியுள்ளனர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் மக்ரோன் தமது துணைவியாருடன் இரு நாள் அலுவல் பயணமாக மலேசியா வந்திருந்தார். பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள், எரிசக்தி மாற்றம், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மலேசியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இப்பயணம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



