
ஈப்போ, நவ.19-கோலா காங்சாரில் உள்ள தங்கும் வசதியுடன் கூடிய பள்ளியொன்றில் மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில், அப்பள்ளியின் சில நிர்வாகிகளும் ஆசிரியர்களும் தற்காலிகமாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலிருந்த சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் இருந்ததாகவும், அவற்றில் பதிவான காட்சிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் Datuk Seri Fadhlina Sidek தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்யக் கண்காணிப்புக் குழுவை இன்று அனுப்ப உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதோடு பள்ளியின் உள்ள பிறரின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் இல்லாத மாணவர்கள் நாளை தத்தம் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார். பாதுகாப்பு நடைமுறைகளில் கவனக்குறைவு அல்லது விதிமீறல் கண்டறியப்பட்டால், அமைச்சு அதனை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் Fadhlina எச்சரித்தார்.
இதனிடையே, சம்பவம் குறித்து பொதுமக்கள் ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும், மாணவரின் குடும்பத்தினரின் தனியுரிமையை மதித்து, அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனுக்குத் தேவையான உளவியல் மற்றும் சமூக ஆதரவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் பள்ளியில் உயிரிழந்ததை பேராக் மாநிலக் கல்வித் துறை நேற்று உறுதிப்படுத்தியது. மாணவரின் உடல் தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 9 மணிக்கு உடற்கூராய்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.



