
இஸ்கண்டார் புத்: ஜோகூர் மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் 19 தரவு மையங்களின் சுத்திகரிக்கப்பட்ட நீர் பயன்பாடு, மாநிலத்தின் மொத்த நீர் உற்பத்தியில் வெறும் 1.05 விழுக்காடு மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த 19 தரவு மையங்களும் நாளொன்றுக்கு மொத்தம் 21.277 மில்லியன் லிட்டர் நீரைப் பயன்படுத்துகின்றன.
ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, ஜோகூர் மாநில பொதுப்பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்புக் குழுத் தலைவர் முகமட் ஃபஸ்லி முகமட் சாலே (Mohamad Fazli Mohamad Salleh) இதனைத் தெரிவித்தார்.
அந்த 19 தரவு மையங்களும் ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 73.088 மில்லியன் லிட்டர் நீர் வழங்கக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பின்னர் 21.277 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், 11 தரவு மையங்கள் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் லிட்டருக்கும் குறைவான நீரைப் பயன்படுத்துகின்றன. எஞ்சிய மையங்கள் 1 முதல் 4.172 மில்லியன் லிட்டர் வரை நீரைப் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.
செயல்பாட்டில் உள்ள 19 தரவு மையங்களில் ஒன்பது மையங்கள், Air-Cooled Chiller, Direct-to-Chip Liquid Cooling, Cold Plate Liquid Cooling மற்றும் Immersion Cooling உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நீர் பயன்பாட்டைக் குறைப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தரவு மையங்களின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி மாநில அரசாங்கம் ஜோகூர் மாநில தரவு மைய மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை (JPPPDNJ) அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.



