
ஜகார்த்தா, நவம்பர்-21,இந்தோனேசியாவில், 10 வயது சிறுமியைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த கொமோடோ உடும்பு, அச்சிறுமியின் தந்தையைக் கடித்துக் காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரின்சா தீவில் கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்தது.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியைப் பின்தொடர்ந்து அந்த இராட்சதப் பல்லி இனம் வீட்டுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
அப்போது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 48 வயது தந்தையை, அது இடது காலில் கடித்துக் காயப்படுத்தியது.
அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கூடுதல் சிகிச்சை தேவையா என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் கொமோடோ தேசியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் இவ்வகைப் பல்லிகள் நுழைவதைத் தடுக்க, 2021-ஆம் ஆண்டிலேயே அங்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தும், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோ, 3 மீட்டர் நீளம் வரையிலும், 70 கிலோ கிராம் எடை வரையிலும் வளரக்கூடியது.
இவை கடித்தால், இவற்றின் விஷத்தன்மை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.



