
கோலாலம்பூர்- கல்வி அமைச்சின் (KPM) கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுக்கு (PIBG) இதுவரை அரசாங்கம் எந்தவொரு சிறப்பு நிதியையும் ஒதுக்கவில்லை என்று கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆண்டுதோறும் கல்வி அமைச்சுக்கு வழங்கும் நிதி, பள்ளிகளின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கல்வி, இணைப்பாட நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், பள்ளி வளர்ச்சிக்குப் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.
கூடுதல் வகுப்புகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது, பயிற்சி தொகுப்புகளை வழங்குவது, இணைப்பாட நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் PIBG சங்கங்கள் பள்ளிகளுக்கு உதவ முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனுடன், பெற்றோர், சமூகத்தினர் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் PIBKS திட்டத்தின் மூலமும் பள்ளிகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுக்கு ஆண்டுதோறும் நேரடியாக நிதி வழங்கும் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக, ஜிபிஎஸ்-இகான் (GPS-Igan) நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் ஜானி ஜவாவி (Ahmad Johnie Zawawi) எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.



