
ஈப்போ, நவம்பர் 27 – பேராக் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்தின் நலன், கல்வி மற்றும் கிராம மேம்பாட்டிற்காக மொத்தம் 7.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாராணி முகமட் (Datuk Seri Saarani Mohamad) தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தியச் சமூகத்தினர் மற்றும் இந்தியக் கிராமங்களின் மேம்பாட்டிற்கு 6.5 மில்லியன் ரிங்கிட்டும், இந்திய மாணவர்களின் கல்வி உதவிக்கு 1 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கப்படவுள்ளன.
இதனிடையே, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன், முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு 12 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து இவ்வாண்டு 13 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 1 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேராக் மாநிலத்தில் முதன்முறையாக இந்துக்களுக்கான திருமணத்திற்கு முந்தைய விழிப்புணர்வுப் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தேசியப் பதிவுத் துறை மற்றும் மாநில அரசின் முன்னெடுப்பில் நடைபெறவுள்ள இத்திட்டத்தில், குடும்ப உறவுகள், நிதி மேலாண்மை, தம்பதியரின் பொறுப்புகள் மற்றும் திருமணச் சடங்குகளின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து வழிகாட்டப்படும். இதற்காக 250,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் முருகன் மாநாடு வரும் ஆண்டிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல இன மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு 250,000 ரிங்கிட்டும், சமூக நலன், கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு சாரா அமைப்புகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், பேராக் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு பட்ஜெட் 1.7 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 1.1 பில்லியன் ரிங்கிட் நிர்வாகச் செலவுகளுக்கும், 600 மில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடுகள் இந்திய சமூகத்தின் கல்வி, நலன், கிராம மேம்பாடு மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



