Latestமலேசியா

இணையவழி சூதாட்டம்: நடவடிக்கை எடுப்பதில் கூகுள் மிகவும் தாமதம் – ஃபஹ்மி

புத்ராஜெயா, நவம்பர் 27– இணையவழி சூதாட்டம் தொடர்பான புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதில் கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் அலட்சியமாகவும் மிகவும் தாமதமாகவும் செயல்படுவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) குற்றம்சாட்டினார்.

சில புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க 90 நாட்களுக்கும் மேலாகிறது. அதேவேளை, மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் சூதாட்ட உள்ளடக்கங்கள் தொடர்பான புகார்களின் நடவடிக்கை நிலவரமும் இதுவரை தெரியவில்லை என்றார்.

இந்தத் தாமதமே கூகுள் நிறுவனத்திற்கு எதிராக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) சட்ட நடவடிக்கை எடுத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 25ஆம் தேதி, கூகுள் நிறுவனத்திற்கு எதிராக MCMC இரண்டு வழக்குகளைத் தொடர்ந்தது. இணையவழி சூதாட்டம் மற்றும் மோசடி உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தத் தவறியது, மேலும் பபாகோமோ (Papagomo) தொடர்பான உள்ளடக்கத்தை மீண்டும் வெளியிட்டது ஆகியவை வழக்குகளுக்கான காரணங்களாகும்.

இரண்டு வழக்குகளிலும் 300 மில்லியன் ரிங்கிட் என மொத்தம் 600 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மலேசியாவில் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள 15 பில்லியன் ரிங்கிட் முதலீட்டுக்கும் இந்தச் சட்ட நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஃபஹ்மி தெளிவுபடுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!