
கோலாலம்பூர், செப்டம்பர்-13-வெளிமாநிலங்களில் கல்வி பயிலும் B40 பிரிவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச இருவழி விமான பயண டிக்கெட்டுகளை வழங்குமாறு அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹித் ஹமிடி அதனை அறிவித்துள்ளார்.
அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய சாஹிட், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு உயர் கல்வி அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சபா, சரவாக் மற்றும் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த மாணவர்கள் பெருநாள் காலங்களிலும் பருவ விடுமுறைகளிலும் சிரமமின்றி சொந்த ஊர் திரும்புவதை உறுதிச் செய்வதே இதன் நோக்கமாகும்.
உயர்கல்வி வாய்ப்புகளோடு மாணவர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த சலுகையைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை உயர் கல்வி அமைச்சு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



