Latestமலேசியா

‘Blacky’ நாயை மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் இழுத்துச் சென்றதாக இருவர் மீது விலங்கு வன்கொடுமை குற்றச்சாட்டு

ஜார்ஜ்டவுன், அக்-29-‘Blacky’ என்ற நாயை மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் இழுத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 62 வயதான மெக்கானிக் ஒருவர் மற்றும் அவரது நண்பர் மீது ஜார்ஜ்டவுன் sessions நீதிமன்றத்தில் விலங்கு வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனினும் அவ்விருவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட பெண் நாயை மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்று, அதற்கு வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்தியதாக Lee Beng Hooi மற்றும் Yeoh Keat Chye மீது கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி மாலை Jalan Hijau 4 பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

விலங்குகள் நலச் சட்டம் 2015இன் கீழ் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20,000 ரிங்கிட் முதல் 100,000 ரிங்கிட் வரை அபராதம், அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

வழக்கை நடத்திய கால்நடை சேவைகள் துறை தரப்பு, நாயைத் தகுதியான தரப்பினர் தத்தெடுப்பதற்காக ஒப்படைக்க அனுமதி கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தது. நீதிமன்றம் அவ்வழக்கின் விசாரணை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி, Jelutong, Batu Lancangங்கில் நாய் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட ஒருவர், சம்பந்தப்பட்ட நபர்களை நிறுத்துமாறு கூறியதைத் தொடர்ந்து அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அது குறித்து விலங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் David Yim அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

அதனை அடுத்து, நாயைக் காப்பாற்றவும் சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறியவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக பினாங்கு கால்நடை சேவைகள் துறை இயக்குநர் Dr Saira Banu தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!