
சிப்பாங், செப்-08-மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) உடனான ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், பக்காத்தான் ஹராப்பான் (PH) தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாக அதன் தேர்தல் இயக்குநர் Datuk Seri Amirudin Shari தெரிவித்திருக்கிறார்.
BN-உடன் தொகுதிப் பங்கீடு அல்லது ஒத்துழைப்பு தொடர்பாக இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ முடிவும் எட்டப்படவில்லை. மலாக்கா முதலமைச்சர் Datuk Seri Ab Rauf Yusohவுடன் இதுவரை இணையம் வழியாக மட்டுமே கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாக Amirudin கூறினார். எனினும், அவை இன்னும் முறையான பேச்சுவார்த்தையாக மாறவில்லை என்றும், அடுத்தகட்ட பேச்சுக்கான தேதி மற்றும் நேரம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா மாநில சட்டமன்றம் இம்மாத இறுதிக்குள் கலைக்கப்படலாம் என Ab Rauf முன்னதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், அது குறித்து Amirudin அவ்வாறு தெரிவித்தார். சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான இறுதி முடிவு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்கு உட்பட்டது. எனவே Ab Raufபின் அக்கூற்றை உறுதியான அறிவிப்பாகக் கருத முடியாது என்றாரவர்.
முந்தைய தேர்தல்களைவிட மாறுபட்ட அரசியல் சூழ்நிலையையும் குறுகிய கால அவகாசத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், பல்வேறு சாத்தியமான நிலைமைகளுக்கு PH தயாராகி வருகிறது. தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே தங்களுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான சூழல் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.



