
கோலாலம்பூர், செப்டம்பர் 8 – நாட்டின் தேசிய ஒற்றுமை, கல்வி மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளங்களை அமைத்த தலைவர்களில் துன் அப்துல் ரசாக் ஹுசேன் முக்கிய பங்கு வகிப்பதாக தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள துன் அப்துல் ரசாக் நினைவகத்தில் நடைபெற்ற ‘துன் அப்துல் ரசாக்: நாட்டின் கட்டமைப்பின் சிற்பி’ என்ற தேசியத் தலைவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் முக்கிய கொள்கைகள் பலவற்றில் துன் அப்துல் ரசாக்கின் சிந்தனையும் தலைமைத்துவமும் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
1969 மே 13 சம்பவத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதி மற்றும் இன ஒற்றுமையை மீட்டெடுக்கும் முயற்சிகளில் துன் அப்துல் ரசாக் முக்கிய பங்காற்றியதாக அவர் கூறினார். அவரது தலைமையிலான மஜ்லிஸ் கெராக்கான் நெகாரா (MAGERAN) காலகட்டத்தில் தேசிய ஒற்றுமைத்துறை உருவாக்கப்பட்டதுடன், பின்னர் தேசிய ஆலோசனை மன்றமும் அமைக்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் உருவான ருக்குன் நெகாரா, 1970ஆம் ஆண்டு தேசிய சித்தாந்தமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 56 ஆண்டுகள் கடந்தும் நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தும் முக்கிய வழிகாட்டியாகத் தொடர்வதாக ஆரோன் தெரிவித்தார்.
இதேவேளை, 1956 ரசாக் அறிக்கை மூலம் தேசிய கல்வி முறைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். பல்வேறு மொழி மற்றும் பண்பாட்டு பின்னணிகளைப் பேணிக்கொண்டே, கல்வியின் மூலம் பொதுவான தேசிய அடையாளத்தை உருவாக்கும் நோக்கம் அதில் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
மேலும், வறுமையை ஒழித்தல் மற்றும் இனங்களுக்கிடையிலான பொருளாதார சமநிலையின்மையை குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் (DEB) உருவாக்கத்திலும் துன் அப்துல் ரசாக்கின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
துன் அப்துல் ரசாக் உருவாக்கிய தேசிய கட்டமைப்பைத் தொடர்ந்து, தற்போதைய மடானி அரசு சமூக மட்டத்திலிருந்து கல்வி நிறுவனங்கள் வரை ஒற்றுமையை வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் ஆரோன் தெரிவித்தார்.
அவற்றில் ருக்குன் தெத்தாங்கா பகுதிகள், தன்னார்வ ரோந்து திட்டங்கள், தபிகா பெர்படுவான், சமூக மத்தியஸ்த சேவைகள் மற்றும் பள்ளி, உயர்கல்வி நிலையங்களில் ருக்குன் நெகாரா தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
துன் அப்துல் ரசாக்கின் முன்னாள் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ தாமானில் இந்த நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 1962 முதல் 1976ஆம் ஆண்டு அவர் மறையும் வரை அந்த இல்லத்தில் வசித்திருந்த நிலையில், நாட்டின் வரலாற்றில் முக்கிய முடிவுகள் உருவான இடங்களில் ஒன்றாக ஸ்ரீ தாமான் திகழ்வதாக ஆரோன் கூறினார்.



