
மலாக்கா, செப்-08–தற்போதைய புகைமூட்டச் சூழலில், குழந்தைகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதா வேண்டாமா என்பதைப் பெற்றோர் பொறுப்புடன் முடிவெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காற்றும் தூய்மைக்கேட்டின் தாக்கம் குறித்து பெற்றோருக்கு கவலை உள்ளது. அதனை அமைச்சு புரிந்து கொள்கிறது. எனவேதான் குழந்தைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோருக்கு, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதற்கான தேர்வு வழங்கப்பட்டுள்ளதாக துணையமைச்சர் Wong Kah Woh தெரிவித்தார்.
எனினும், இத்தகைய முடிவு குழந்தைகளின் நலன் மற்றும் தேவைகளை முன்னிறுத்தி பொறுப்புடன் எடுக்கப்பட வேண்டும். காற்றும் தூய்மைக்கேட்டின் போது பள்ளி நிர்வாகம் தொடர்பான கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களே தொடர்ந்து முக்கிய குறிப்பாக இருக்கும் என அவர் கூறினார்.
காற்றுத் தரக் குறியீடு (API) 100-ஐத் தாண்டினால் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்; API 200-ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடப்பட்டு, வீட்டிலிருந்தே கற்பித்தல் மற்றும் கற்றல் (PdPR) முறை செயல்படுத்தப்படும் என Wong Kah Woh விளக்கினார்.
புகைமூட்டத்தை பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருக்கலாம் என கல்வி அமைச்சர் Datuk Seri Fadlina Sidek நேற்று தெரிவித்திருந்தார். இருப்பினும், API அளவு நிர்ணயிக்கப்பட்ட நிலைகளைத் தாண்டினால் மட்டுமே பள்ளிகள் மூடப்பட்டு PdPR அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



