Latestமலேசியா

ஷா ஆலமில் ஆயுதங்களுடனான மோதல் சம்பவங்கள்: 10 பேருக்கு வலை வீசும் போலீஸ்

ஷா ஆலம், செப்டம்பர் 7 – குற்றச்செயலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரு தனித்தனி ஆயுத மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 பேரை சிலாங்கூர் போலீசார் தேடி வருகின்றனர்.

முதல் சம்பவம், ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆலம் மெகாவில் இடம்பெற்ற குழு மோதலில் 23 வயது ஆடவர் உயிரிழந்தது தொடர்பானது. அந்த நபருக்கு ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பான ஆறு குற்றப் பதிவுகள் இருந்தன.

இரண்டாவது சம்பவம், ஆகஸ்ட் 13ஆம் தேதி ஸ்ரீ மூடாவில் இடம்பெற்றதுடன், ஒருவர் இருவரால் பாராங்கத்தி மற்றும் துப்பாக்கியைப் போன்ற பொருளைக் கொண்டு தாக்கப்பட்டார்.

சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் (Datuk Shazeli Kahar) கூறுகையில், ஆகஸ்ட் 14 முதல் 28ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 23 முதல் 46 வயதுடைய 21 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏழு பாராங்கத்திகள், ஒரு இரும்புச் சுத்தியல், இரண்டு கேபிள் வெட்டிகள், ஒன்பது கார்கள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுவரை எட்டு சந்தேக நபர்கள் கொலைக் குற்றச்சாட்டிலும், மேலும் நான்கு பேர் கலவரக் குற்றச்சாட்டிலும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 10 பேரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!