
கோலாலம்பூர், செப்டம்பர்-25,
counter setting முறையிலான லஞ்ச விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 அமுலாக்க அதிகாரிகள் உட்பட மேலும் 12 பேர் கைதாகி, விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 10 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் ஜோகூர், பினாங்கு ஆகிய இடங்களில் கைதுச் செய்யப்பட்டனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் ஜோகூர் கிளை அதனை உறுதிப்படுத்தியது.
ஜோகூரில் பாசீர் கூடாங், மூவார் மற்றும் மலாக்கா கடல்சார் நுழைவு, வெளியேற்றச் சோதனை மையங்களில் பணியாற்றிய இந்த அதிகாரிகள், இந்தோனேசியப் பிரஜைகளை சட்டவிரோதமாக இந்நாட்டுள் நுழைய அனுமதிப்பதற்காக 4 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.
சுமார் 50,000 ரிங்கிட் ரொக்கம், 71 மில்லியன் ரூபியா வெளிநாட்டு நாணயம், ஒரு SUV மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தவிர, 12 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் உள்ள 25 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.