
புத்ராஜெயா, அக்டோபர்-31 – பெர்சாத்து கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட CSA எனப்படும் நம்பிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட சீர்திருத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை, அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் கூட்டாகக் கண்காணிப்பர்.
தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் இதனைத் தெரிவித்தார்.
2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் அப்போதைய அரசாங்கங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைப் போன்று, இரு தரப்பினரும் இணைந்து வாக்குறுதிகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் முறையைப் பயன்படுத்துவது பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார்.
2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் வகையில், பெர்சாத்து-வின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேர் அரசாங்கத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் இரண்டு தவணைகளாக வரையறுப்பது, சட்டத்துறைத் தலைவரின் அதிகாரங்களைப் பிரிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களும் CSA ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் இணைய விரும்பும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு திறந்தே இருப்பதாக ஃபாஹ்மி தெரிவித்தார்.



