
கோலாலம்பூர், அக்டோபர்-31-நாட்டு மக்கள் நலனையும் அரசியல் நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டு, அரசாங்கத்துடனான CSA எனப்படும் நம்பிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பெர்சாத்து கட்சியின் முடிவுக்கு, அதன் தலைவர்களில் ஒருவரான டத்தோ ஆர். சஞ்சீவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியான மோதல்களுக்கு அப்பாற்பட்டு, மலேசிய மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை, வேலைவாய்ப்புப் பாதுகாப்பு மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவற்றிலேயே மக்கள் அதிக அக்கறை கொண்டிருப்பதாக, பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
என்றாலும், அரசியல் நிலைத்தன்மைக்கு ஆதரவளிப்பது என்பது, அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதாகப் பொருள்படாது என்றும் சஞ்சீவன் தெளிவுப்படுத்தினார்.
அரசாங்கத்தின் செலவினங்களைக் கண்காணிப்பதும், மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் கொள்கைகளை எதிர்ப்பதும் பெர்சாத்துவின் முக்கியப் பொறுப்பாகத் தொடரும் என்றார் அவர்.
நாட்டுக்கு நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், அரசாங்கம் தனது கடமையிலிருந்து தவறும்போது துணிச்சலுடன் குரல் கொடுப்போம் என்றும் சஞ்சீவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



