Latestமலேசியா

CUMIG: ஆறாம் படிவ மாணவர்களுக்கு உதவித்தொகை; இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம்

கோலாலம்பூர், ஏப்ரல்-29-6-ஆம் படிவ மாணவர்களுக்கான அரசாங்கத்தின் உத்தேச 250 ரிங்கிட் மாதாந்திர உதவித்தொகை, மலேசிய இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

​இது குறித்து மலாயா பல்கலைக்கழக இந்தியப் பட்டதாரிகள் சங்கமான CUMIG வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் கல்லூரிகளில் முப்பதாயிரம் ரிங்கிட் வரை செலவாகும் கல்வியை, STPM வழியாக வெறும் ஐந்நூறு ரிங்கிட்டில் பெற முடியும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, மொத்தமாக 18 மாதங்களைக் கொண்ட STPM படிப்புக்கு ஏறக்குறைய 5,000 செலவாகிறது.

இப்போது மாதம் 250 ரிங்கிட் வழங்கப்பட்டால், அதே காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு கிடைக்கும் மொத்தத் தொகை 4,500 ரிங்கிட் ஆகும்; அப்படிப் பார்த்தால் STPM மாணவர்களின் உண்மைச் செலவு 500 ரிங்கிட் மட்டுமே.

ஆக, தனியார் கல்வி நிறுவனங்களில் அல்லாமல் STPM பாதையைத் தேர்ந்தெடுத்தால், இந்த உதவித்தொகை மூலம் ஒரு மாணவர் சுமார் 29,500 ரிங்கிட் வரை சேமிக்க முடியும் என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 5,000 இந்திய மாணவர்கள் இப்பாத்தையைத் தேர்ந்தெடுத்தால், சமூகத்தின் பொருளாதாரச் சுழற்சியில் சுமார் 147.5 மில்லியன் ரிங்கிட் மிச்சமாகும்.

இந்தப் பணத்தைச் சேமிப்பாகவோ அல்லது உயர்கல்வி முதலீடாகவோ மாற்ற முடியும் என CUMIG வலியுறுத்தியுள்ளது.

​தரமான கல்வி எப்போதும் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

தரமான கல்வி மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை நோக்கிய இந்த நகர்வு இந்திய சமூகத்திற்கு ஒரு பொற்கால வாய்ப்பாகும் என CUMIG குறிப்பிட்டது.

மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கு வழங்குவது போல், ஆறாம் படிவ மாணவர்களுக்கும் மாதா மாதம் 250 ரிங்கிட் வாழ்கைக் செலவின உதவித் தொகை வழங்க அரசாங்கம் முடிவுச் செய்துள்ளதாக பிரதமர் முன்னதாகக் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!