
வாஷிங்டன், ஏப்ரல்-21-அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையான FBI-யின் இயக்குநர் காஷ் பட்டேல் (Kash Patel), ‘The Atlanticதி’ சஞ்சிகை மற்றும் அதன் செய்தியாளர் சாரா ஃபிட்ஸ்பாட்ரிக் (Sarah Fitzpatrick) மீது 250 மில்லியன் டாலர் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த இதழில் வெளியான ஒரு கட்டுரையே இந்த மோதலுக்குக் காரணமாகும்.
அதில், இந்திய வம்சாவளியான பட்டேலுக்கு மோசமான மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், இதனால் கணிக்க முடியாத அவரின் நடத்தையால் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும், அவர் பல முக்கியமான கூட்டங்களைத் தவிர்த்ததாகவும் பெயரில்லா பல்வேறு ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பட்டேல், அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
FBI தரப்பில் முன்கூட்டியே தரப்பட்ட விளக்கங்களை அலட்சியப்படுத்தி விட்டு, அந்த இதழ் உள்நோக்கத்துடன் செய்தியை வெளியிட்டதாக பட்டேலின் வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால், ‘The Atlantic’ நிறுவனம் தனது செய்தியில் உறுதியாக இருப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
முக்கிய அரசு அதிகாரிக்கும் ஊடகத்துக்குமான இந்தச் சட்டப் போராட்டம் வாஷிங்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



