கோலாலம்பூர், ஏப்ரல் 4 – நாட்டின் கோடீஸ்வரரும், தலைசிறந்த தொழிலதிபருமான டான் ஸ்ரீ ராபர்ட் குவோக், 2024 போர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு ஆயிரத்து 140 கோடி அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமுள்ள, முதல் 200 கோடீஸ்வரர்கள் பட்டியலில், 176-வது இடத்தை பிடித்துள்ள ஒரே மலேசியராகவும் ராபர்ட் குவோக் திகழ்கிறார்.
எனினும், முந்தைய ஆண்டு ஆயிரத்து 180 கோடி சொத்து மதிப்புடன், அந்த பட்டியலில் 146-வது இடத்தை பிடித்திருந்த அவர், இவ்வாண்டு சற்று சரிவு கண்டு 176-வது இடத்தில் உள்ளார்.
இவ்வாண்டு, போர்ப்ஸ் பட்டியலில் இணைந்துள்ள உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ஈராயிரத்து 781 பேராக அதிகரித்துள்ளது.
பிரபல LVMH முத்திரையின் உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட் தொடர்ந்து முதலிடத்தை வகிக்கும் வேளை ; தொழில்நுட்ப ஜாம்பவான் ஆன எலோன் மஸ்கும், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ராபர்ட் குவோக்கை தவிர்த்து 15 மலேசியர்கள் அந்த பட்டியலில் புதிதாக பெயர் பதித்துள்ளனர்.
ராபர்ட் குவோக்கை அடுத்து, இரண்டாவது நிலையில் ஹாங் லியோங் குழுமத்தின் டான் ஸ்ரீ கியூக் லெங் சான், எட்டாயிரத்து 800 கோடி டாலர் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள வேளை ; நாட்டின் தொலைத் தொடர்பு ஜாம்பவானான டான் ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், நான்காயிரத்து 900 கோடி டாலர் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.