புத்ராஜெயா, ஜூலை 10 – HRD Corp – மனிதவள மேம்பாட்டு கழகம் மீது, சுயேட்சை தணிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள, கெசுமா எனப்படும் மனிதவள அமைச்சு, மூன்றாம் தரப்பு தொழில்முறை தணிக்கையாளரை நியமிக்கும்.
தேசிய தணிக்கை துறை மற்றும் தேசிய கணக்காய்வு துறை அறிக்கைகளை தொடர்ந்து, வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்ய, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
HRD Corp கழகத்தின் செயல்முறைகள், நடைமுறைகள், ஆவணங்கள் உட்பட சட்டம் மற்றும் வழிகாட்டிக்கு அது இணங்கி செயல்பட்டுள்ளதா என்பதை அந்த சுயேட்சை தணிக்கை உறுதிச் செய்யும்.
அந்த தணிக்கையாளர், ஜூலை 31-ஆம் தேதிக்குள் நியமிக்கப்படுவார். ஊழல் தடுப்பு ஆணையம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ தரப்பினரின் விசாரணைக்கு ஏற்ப சுயேட்சை தணிக்கையாளரும் தனது விசாரணையை மேற்கொள்வார்.
இவ்வேளையில், கெசுமா தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ கைருல் டிசைமி டாவுட் தலைமையில், சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதையும் ஸ்டீவன் சிம் உறுதிப்படுத்தினார்.
HRD Corp தொடர்பான அறிக்கைகளை அந்த பணிக்குழு ஆராயும் என்பதோடு, முன் வைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்படுவதையும் அது உறுதிச் செய்யும்.
கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேசிய கணக்காய்வு அறிக்கை வாயிலாக, HRD Corp கழகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது.