
கோலாலாம்பூர், ஜூலை-4 – அண்மையில் கைதுச் செய்யப்பட்ட ஒரு வங்காளதேச கிளர்ச்சிக் கும்பல், சிரியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள IS இஸ்லாமிய அமைப்பை ஆதரிப்பதற்காக நிதி சேகரித்து வந்துள்ளது.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் இஸ்மாயில் அதனை அம்பலப்படுத்தினார்.
GMRB அல்லது வங்காளதேச தீவிர கிளர்ச்சிக் குழு என அழைத்துக் கொள்ளும் அக்கும்பல், IS அமைப்புக்கு நிதி சேகரித்து வந்தது E8 எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சிறப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது.
சமூக ஊடகங்கள், வாட்சப் மற்றும் டெலிகிராம் போன்ற தகவல் அனுப்பும் செயலிகள் மூலம் அது உறுப்பினர்களைச் சேர்க்கிறது; ஒவ்வோர் உறுப்பினரும் ஆண்டுக்கு 500 ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
சேர்க்கப்படும் உறுப்பினர்கள் பெரும்பாலும் வங்காளதேச தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் ஆவர்.
முன்னதாக ஏப்ரல் 28 முதல் ஜூன் 21 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் 25 முதல் 35 வயதுள்ள 26 வங்காளதேச ஆடவர்கள் கைதாகினர்.
எனினும், அவர்கள் மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடவில்லை, மாறாக, ஆட்களைச் சேர்த்து IS சித்தாந்தங்களை பரப்ப முயன்றதாக IGP சொன்னார்.
இதுவரை 5 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்; 15 பேர் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் SOSMA சட்டத்தின் கீழ் விசாரணையில் உள்ளனர்.
வெளிநாட்டு போராளி கும்பல்களின் transit எனப்படும் இடைமாற்ற இடமாக மலேசியா மாறுவதைத் தடுக்க , E8-யின் இந்நடவடிக்கை அவசியமாகியுள்ளதாக IGP மேலும் கூறினார்.