
கோலாலம்பூர், மே-25–சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ வழங்கும் ஆன்லைன் வாகன உரிமை மாற்ற (THM) சேவை தற்காலிகமாக நிறுத்தப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் முறைமையில் ஏற்பட்ட மோசடி மற்றும் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, JPJ முறைமையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இருப்பினும், அந்தப் பணிகள் நீண்ட வார இறுதி விடுமுறையில் நடைபெறும் என்பதால் பொதுமக்களின் சேவைகள் பாதிக்கப்படாது என அவர் கூறினார்.
முன்னதாக, பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களுக்கு தெரியாமல் வாகன உரிமை மாற்றம் செய்யப்பட்டதாகப் பல புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆன்லைன் THM சேவையை தற்காலிகமாக நிறுத்த JPJ திட்டமிட்டிருந்தது.
ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சேவையை தொடர்ந்தபடியே பாதுகாப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அந்தோணி லோக் உறுதியளித்துள்ளார்.



