
கோலாலாம்பூர், மே-25-அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் GLC மற்றும் அரசாங்கப் முதலீட்டு நிறுவனங்களான GLIC உட்பட, 20 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட சொத்து விற்பனைகளுக்கான பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை 50 விழுக்காட்டிலிருந்து, மீண்டும் பழையபடி 30 விழுக்காட்டுக்கே மாற்ற வேண்டும் என, DAP ஆலோசகர் லிம் குவான் எங், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார அமைச்சின் புதிய சொத்து கையகப்படுத்தும் வழிகாட்டுதலின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த திடீர் மாற்றம், பக்காத்தான் ஹரப்பான் (PH) ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக குவான் எங் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய கொள்கை மாற்றங்கள் சந்தையில் தேவையற்ற தயக்கத்தை உருவாக்குவதோடு, அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பலவீனப்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
பொருளாதார மற்றும் வணிக ரீதியான முடிவுகள், குறுகிய இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, நியாயம் மற்றும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என, அந்த முன்னாள் நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
இவ்வேளையில், லிம் குவான் சிங்கின் இந்த அதிரடி கோரிக்கைக்கு கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மலேசியா எப்போதும் கொள்கை நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை அரவணைக்கும் நாடாகத் திகழ வேண்டும் என்று கூறிய கணபதிராவ், பழைய 30 விழுக்காட்டு வரம்பைப் பேணுவது மட்டுமே பல்லின சமூகத்தில் சமநிலை, நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதலீட்டு சூழல் பாதிக்கப்படாமலிருக்க அரசாங்கம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என இரு தலைவர்களுமே வலியுறுத்தியுள்ளனர்.
பொருளாதார அமைச்சு கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, GLC மற்றும் GLIC ஆகியவற்றின் வியூகச் சொத்துகளை விற்பனை செய்யும் போது அல்லது அப்புறப்படுத்தும் போது, அவை நாட்டின் சமூகப் பொருளாதார நோக்கங்கள் மற்றும் பூமிபுத்ரா கொள்கை திட்டங்களுடன் முழுமையாக ஒத்துப்போவதை உறுதிச் செய்வதே இந்த நிபந்தனையின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



