
புத்ராஜெயா, ஏப்ரல்-21-பழைய மற்றும் கையால் எழுதப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் இனி செல்லாது எனப் பரவி வரும் குழப்பமான தகவல்கள் குறித்து, தேசியப் பதிவிலாகாவான JPN விளக்கமளித்துள்ளது.
அதாவது, கையால் எழுதப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற தகவலை அது மறுத்துள்ளது.
எக்காலத்திலும் அப்படியொரு தகவலை JPN வெளியிட்டதில்லை.
கையால் எழுதப்பட்டிருந்தாலும், அல்லது மிகவும் பழையதாக இருந்தாலும், அவை பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்தால் சட்டப்பூர்வமாக இன்னும் செல்லுபடியாகும் என்பதே உண்மை என JPN கூறிற்று.
ஒருவேளை, கையெழுத்துப் படிக்க முடியாத அளவுக்கு அச்சான்றிதழ்கள் மங்கிப் போயிருந்தாலோ அல்லது சேதமடைந்து இருந்தாலோ தான் அவற்றை மாற்ற வேண்டியிருக்கும் என அது தெளிவுப்படுத்தியது.
பழைய சான்றிதழ் சேதமடைந்திருந்தாலோ அல்லது எழுத்துக்கள் மங்கியிருந்தாலோ, பொது மக்கள் எந்தவொரு JPN கிளையிலும் அதன் புதிய நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.
மற்றபடி, பழையப் பிறப்புச் சான்றிதழ்களைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லையென, ஒரு வீடியோ வாயிலாக JPN விளக்கமளித்துள்ளது.



