
ஷா ஆலாம், செப்டம்பர்-4,ஷா ஆலாம் நெடுஞ்சாலையான KESAS நேற்று பனி பொழிந்தது போல் வெள்ளை நிறத்தில் காட்சியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
நேற்று மதியம் கிள்ளானில் இருந்து கோலாலம்பூர் செல்லும் KESAS-சின் 30 முதல் 30.5 கிலோ மீட்டர் வரையிலான 500 மீட்டர் தூரப் பாதையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
எனினும் அந்த வெள்ளைப் ‘பனி’
உண்மையில் சோப்பு நுரை என போலீஸ் உறுதிப்படுத்தியது.
ஆகஸ்ட் 24-ஆம் தேதி லாரி ஒன்றிலிருந்து கொட்டிய சோப்பு எச்சங்கள் மீது, நேற்று பெய்த கனமழை பட்டதால் சாலை முழுவதும் நுரை பொங்கி வழியத் தொடங்கியதாக ஷா ஆலாம் மாவட்டப் போலீஸ் கூறிற்று.
சாலையில் வெள்ளை நிறத்தில் அடர்த்தியாகப் படர்ந்திருந்த இந்த நுரையைக் கண்ட வாகனமோட்டிகள், பனி பொழிவது போல் இருப்பதாக இணையத்தில் வீடியோக்களைப் பகிர்ந்தனர்.
அதேவேளை, சாலை வழுக்கும் அபாயம் குறித்த அச்சமும் எழுந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலை பராமரிப்பு நிர்வாகத்தினர், மாலை 5 மணிக்குள் சாலையைக் கழுவி முழுமையாகச் சுத்தப்படுத்தினர்.
ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் சாலை உடனடியாகச் சீரமைக்கப்பட்டது.



