
கோலாலம்பூர், ஜூலை-28-கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் KLIA முனையம் 2-ல், பையொன்றில் இருந்து புகை வெளியேறிய சம்பவம் அங்கு பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது.
அச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. ‘X’ தளப் பயனர் ஒருவர் பதிவேற்றியிருந்த அக்காணொளியில், பவர் பேங்க் இருந்ததாகக் கருதப்படும் ஒரு கருப்புப் பையிலிருந்து புகை வெளியேறுவது காணப்பட்டது.
அப்பையைத் திறந்து சோதிக்கும் முன், உணவக ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்திப் புகையைக் கட்டுப்படுத்த முயன்றனர். பவர் பேங்க்தான் புகைக்குக் காரணம் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
பையிலிருந்து அச்சாதனம் வெளியே எடுக்கப்பட்ட பின், ஆடவர் ஒருவர் அதன் மீது தண்ணீர் ஊற்றும் காட்சியும் அக்காணொளியில் இருந்தது.
இவ்வேளையில், இச்சம்பவம் அரிதாக நிகழ்ந்த ஒன்று என்றும், அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் gateway@klia2 நிர்வாகம் தெரிவித்தது. அச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது வேறு எந்தச் சேதமோ ஏற்படவில்லை. அதோடு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டன. பிற செயல்பாடுகள் இடையூறு இல்லாமல் தொடர்ந்ததாகவும் அது கூறியது.
பவர் பேங்குகளைப் பொறுப்புடன் கையாள்வதோடு அவற்றைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதன் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். அதேவேளையில் சேதம், வீக்கம் அல்லது அதிக வெப்பமடைதல் போன்ற அறிகுறிகள் தென்படும் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.



