Latestமலேசியா

LRT விபத்தில் பாதிக்கப்பட்டவர் பிரசரானாவிற்கு எதிராக தொடுத்திருக்கும் வழக்கு விசாரணை ; 2028 ஜனவரியில் செவிமடுக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, மே 15 – தலைநகர், கம்போங் பாரு நிலையத்திற்கு அருகே, மூன்றாண்டுகளுக்கு முன் இரு LRT இலகு இரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், பலத்த காயங்களுக்கு இலக்கான பெண் ஒருவர் தொடுத்திருக்கும் வழக்கு விசாரணைக்கு, 2028-ஆம் ஆண்டு ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.

கடந்த வாரம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அவ்வழக்கின் நிர்வாக நடைமுறையின் போது, 2028-ஆம் ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அவ்வழக்கு விசாரணை நடைபெறுமென நீதிபதி ஷஹ்ரீர் சாலே நிர்ணயித்தார்.

LRT அமைப்பின் உரிமையாளரான பிரசரானா மற்றும் ரேபிட் ரேல் நிறுவனங்களுக்கு எதிராக, கடந்தாண்டு டிசம்பரில், 57 வயது புளோரன்ஸ் லீ எனும் பெண் ஒருவர் அந்த வழக்கை தொடுத்துள்ளார்.

அவ்விரு தரப்பினரின் அலட்சியப் போக்கு மற்றும் சட்டப்பூர்வ கடமையை மீறிய செயல் ஆகியவையே அவ்விபத்துக்கான காரணம் என லீ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், தமக்கு மருத்துவச் செலவுப்படி தொகையாக 84 ஆயிரத்து 372 ரிங்கிட் 58 சென் உட்பட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 524 ரிங்கிட் எட்டு சென் சிறப்பு இழப்பீடாக வழங்கப்பட வேண்டுமென லீ தனது மனு வாயிலாக கோரியுள்ளார்.

2021-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி, கெலானா வழித் தடத்தில் நிகழ்ந்த அவ்விபத்தால், நரம்பியல் அதிர்ச்சி, மன அழுத்தம், நிதிப் பிரச்சனை ஆகியவற்றை தாம் எதிர்கொள்ள நேர்ந்ததோடு, தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாலவும் லீ குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், அப்போதைய பிரசரானா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், அவ்விபத்து குறித்து வெளியிட்ட வேண்டத்தகாத கூற்றால் தாம் மேலும் பாதிக்கப்பட்டதாகவும் லீ கூறியுள்ளார்.

“இரு இரயில்கள் ஒன்றையொன்று முத்தமிட்டதாக கூறி அவ்விபத்தை சிறுமைப்படுத்திய தாஜுடின் பின்னர் கடும் கண்டனத்தை பெற்றார்.

இந்நிலையில், தங்களின் அலட்சியப் போக்கு காரணமாக அவ்விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரசரானாவும், ராபிட் ரேல் நிறுவனமும் மறுத்துள்ளன.

ஆதாரம் இன்றி அலட்சியம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை, இந்த வழக்கில் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவை கூறியுள்ளன.

இந்நிலையில், இவ்வழக்கின் மறு நிர்வாக நடைமுறைகள் வரும் செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெறுமென, லீயின் வழக்கறிஞர் ஜோய் அப்புக்குட்டன் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!