
புத்ராஜெயா, ஜூலை-22-மலேசியக் குடிமக்களுக்குத் தரமான வேலைவாய்ப்புகளை உறுதிச் செய்வதில் மனிதவள அமைச்சான KESUMA தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, MYFutureJobs தளத்தின் மூலம் மொத்தம் 668,321 காலியிடங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 96,700 வேலை வாய்ப்புகள் மலேசியர்கள் விண்ணப்பிப்பதற்காக இன்னமும் திறப்பில் உள்ளன என்றார் அவர்.
இந்த 96,700 வேலை வாய்ப்புகளில், கிட்டத்தட்ட 40 விழுக்காடு உயர் திறன்கொண்ட வேலைகளாகவும், 30 விழுக்காட்டுக்கும் அதிகமானவை தொழில்நுட்ப மற்றும் தொழில்முறைப் பயிற்சி (TVET) சார்ந்த துறைகளாகவும் உள்ளன.
மேலும், இவற்றில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டு வேலைகள் மாதம் 5,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான ஊதியத்தை வழங்குகின்றன.
வேலைத் தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புப் பொருத்தம், தொழில் ஆலோசனைகள் மற்றும் மறுபயிற்சித் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.
அதோடு, புதிய வேலையைத் தொடங்குவதற்காக வேறு இடங்களுக்கு இடம்பெயரும் வேலைத் தேடுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் வரையிலான Bantuan Mobiliti உதவித் தொகையையும் PERKESO வழங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



