
புத்ராஜெயா, ஜூன்-7-மலேசியக் கால்பந்து இரசிகர்கள், விரைவில் தொடங்கவிருக்கும் FIFA உலகக் கிண்ணப் போட்டியை அரசாங்கத்தின் MyGOV Malaysia செயலி மூலமாக இலவசமாக நேரலையில் கண்டு களிக்கலாம்.
MyDigital ID கணக்கு வைத்துள்ள பயனர்கள், இந்தச் செயலியின் புதிய நேரலை ஒளிபரப்பு வசதி (Live-streaming) மூலமாக, RTM நிறுவனத்தின் TV1, TV2 மற்றும் Okey TV அலைவரிசைகளின் உலகக் கிண்ண நேரலைகளைப் பார்க்க முடியும் என்று டிஜிட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.
மலேசியர்கள் டிஜிட்டல் சேவைகளை மிக எளிதாகப் பெறுவதை உறுதிச் செய்வதற்காக, மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியே இதுவென, அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
பல்வேறு அரசு நிறுவனங்களின் சேவைகளை ஒருங்கிணைக்க கடந்த 2025-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த MyGOV செயலி, தற்போது பயணக் கட்டுப்பாட்டு விவரங்கள் மற்றும் கோரப்படாதப் பணம் உள்ளிட்ட 19 அரசு நிறுவனங்களின் 51 சேவைகளை வழங்கி வருகிறது.
தற்போது இச்செயலியை 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டாக நடத்தப்படும் இந்த உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி, ஜூன் 11 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது .



