Latestமலேசியா

PKNS கட்டட வளாகம் இடிப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை: வதந்திகளை மறுத்து நிர்வாகம் விளக்கம்

ஷா ஆலாம், மார்ச் 19 – சிலாங்கூர் ஷா ஆலாமில் 40 ஆண்டுகள் சரித்திரத்தைக் கொண்ட PKNS கட்டட வளாகத்தை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை, அந்த சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதுவோர் அடிப்படையற்ற தகவல் என சாடிய PKNS நிர்வாகம், அந்த பொய்ச் செய்தி பரவல் குறித்து மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் MCMC-யிடம் புகார் கொடுத்திருக்கிறது.

“ 47 ஆண்டுகளாக ஷா ஆலாமின் பெருமை மிகு சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் PKNS வளாகம், அங்கு வர்த்தகச் சேவையை வழங்குவதிலும், சுற்று வட்டார மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் முக்கியதொரு பங்கை ஆற்றி வந்திருக்கிறது”

எனவே அதனை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என அறிக்கையொன்றில் PKNS விளக்கியது.

உண்மையில், செக்ஷன் 14-ல் PKNS-சுக்குச் சொந்தமான பகுதியில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கும் மேம்பாட்டுத் திட்டம், ஷா ஆலாம் மாநகரை ‘இளமையூட்டும்’ ஒரு முயற்சியாகும்.

2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அந்த மேம்பாட்டுத் திட்டம், SACC பேரங்காடி, SACC மாநாட்டு மையம் உள்ளிட்ட பகுதிகளை உட்படுத்தும்; ஆனால் PKNS கட்டட வளாகம் அதற்குள் வராது என அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.

அந்த மேம்பாட்டுத் திட்டம் கூட, அப்பகுதியை தரமுயர்த்தி, பகுதி வாழ் மக்களுக்கும், வெளியில் இருந்து வருவோருக்கும் மேலும் சிறப்பான வசதிகளை ஏற்படுத்தித் தருவதையே நோக்கமாக கொண்டுள்ளது என அது மேலும் கூறியது.

பிரசித்திப் பெற்ற PKNS கட்டட வளாகம் இடிப்படவிருப்பதாக திங்கட்கிழமை முதல் செய்திகள் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் விவாதங்களைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!