Latestமலேசியா

PLIK பயண அனுமதிக்கு மூன்றாம் தரப்பினரின் ஆதரவு கடிதம் தேவையா? நடைமுறையை மறுஆய்வு செய்ய குடிநுழைவுத் துறைக்கு டத்தோ சிவகுமார் பரிந்துரை

கோலாலம்பூர், ஜூலை-12 – Pas Lawatan Ikhtisas அல்லது PLIK என சுருக்கமாக அழைக்கப்படும் பயண அனுமதிக்கு ஆலயங்களே நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என்ற பட்சத்தில், அதில் மூன்றாம் தரப்பின் தலையீடு எதற்கு என, டத்தோ என். சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்றாம் தரப்பின் ஆதரவுக் கடிதத்தை கேட்பது தேவையில்லாத ஒன்று.

எனவே அந்நடைமுறையை குடிநுழைவுத் துறை மறுஆய்வு செய்ய வேண்டுமென, மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவரான அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த PLIK அனுமதியானது, இஸ்லாம் அல்லாத சமயப் பணிகளுக்கு குடிநுழைவுத் துறை வழங்கும் ஒரு சிறப்பு அனுமதியாகும்.

ஆள்பலப் பற்றாக்குறையால் நாட்டிலுள்ள பல இந்து ஆலயங்கள் தற்போது இந்த PLIK அனுமதியின் வாயிலாக இந்தியாவிலிருந்து குருக்கள், அர்ச்சகர்கள், வாத்தியக் கலைஞர்கள், பொதுத் தொழிலாளிகள் போன்றவர்களின் சேவையைப் பெற்று வருகின்றன.

அதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகளை குடிநுழைவுத் துறை தெளிவாக வரையறுத்துள்ளது.

ஆனால், தற்போது கூடுதலாக அரசு சாரா அமைப்புகளின் ஆதரவுக் கடிதம் வேண்டுமென்றும், இல்லையென்றால் விண்ணப்பங்களுக்கு அனுமதி இல்லையென்றும் புதிய நடைமுறை இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அந்த அரசாங்கத் துறையில் தெளிவான விதிமுறைகள் இருக்கும் போது எதற்கு தனியாக ஆதரவுக் கடிதங்கள் கேட்கப்படுகின்றன என்பது தமக்கு விளங்கவில்லை என, டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

இப்படி மூன்றாம் தரப்பினரின் ஆதரவுக் கடிதம் தான், ஒரு பயண அனுமதி அங்கீகரிக்கப்படுவதையும் நிராகரிக்கப்படுவதையும் முடிவுச் செய்கிறது என்றால், RoS எனப்படும் சங்க பதிவிலாகா மற்றும் மாவட்ட நில அலுவலங்களுக்கு என்ன வேலை இருக்கிறது என சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

ஆதரவுக் கடிதம் கொடுத்து விட்டு அவர்கள் பாட்டுக்குப் போய் விடுவார்கள் பிறகு பிரச்னை வந்தால் யார் பதில் சொல்வது என அவர் கேட்டார்.

அண்மையில் செப்பாங்கில் அர்ச்சகர் ஒருவர் சர்ச்சையில் சிக்கிய சம்பவம் போன்று வருங்காலத்தில் நடந்தால், அந்த அர்ச்சகரைப் பணியமர்த்த யார் ஆதரவுக் கடிதம் வழங்கியது என்ற கேள்வி உருவாகும்.

எனவே, கோயில் பணியாளர் நியமனத்தில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளே போதுமானவை; மூன்றாம் தரப்பினரின் ஆதரவுக் கடிதமோ தலையீடோ தேவையில்லை என அறிக்கை வாயிலாக டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!