
கோலாலாம்பூர், அக்டோபர்-4 – மலேசியாவின் பாரம்பரிய ஆடை வடிவமைப்பு மற்றும் கைவினைப்பொருட்கள் துறையில் புதியப் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய தளமாக REKA RONA 2026 நிகழ்ச்சி கோலாலம்பூர் கைவினைப்பொருட்கள் மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
மலேசிய ஃபேஷன் வர்த்தக மேம்பாட்டு சங்கமான PEFEM தலைவரும் பிரபல நடிகையுமான Bkay Nair தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலேசிய பாரம்பரிய பாத்திக் கலையை மையமாகக் கொண்டு சிறந்த ஆடை வடிவமைப்புப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் 8 கல்வி நிறுவனங்கள் மற்றும் வளரும் இளம் வடிவமைப்பாளர்கள் உட்பட 11 தரப்பினர் பங்கேற்ற நிலையில், தீவிர மதிப்பீட்டுக்குப் பிறகு 5 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் வடிவமைத்த சிறப்புமிக்க படைப்புகள் அனைத்தும் இவ்வாண்டு இறுதி வரை தேசிய ஆடை வடிவமைப்பு அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக PEFEM தலைவர் பி.கே. நாயர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆடை வடிவமைப்பு என்பது வெறும் மேடைக் கண்காட்சியோடு நின்றுவிடாமல், ஜவுளி உற்பத்தி, விளம்பரம், மின் – வர்த்தகம் மற்றும் நிகழ்வு மேலாண்மை என பல்வேறு துறைகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வணிகமாக மாற வேண்டும் என்றார்.
இளைஞர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் புதிய வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக உருவெடுக்க வேண்டும் என்றும், பிரபலங்கள் தங்களின் புகழைப் பயன்படுத்தி இளம் கலைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் பி.கே. நாயர் வலியுறுத்தினார்.
பாத்திக் மற்றும் சொங்கெட் (Songket) மட்டுமின்றி Limar, Pua Kumbu, Tenun Pahang, Keringkam, Linangkit போன்ற பாரம்பரிய கலைகளையும் இளையத் தலைமுறையினர் நவீனத்திற்கு ஏற்ப புதுமைப்படுத்தி உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு REKA RONA 2026 இனிதே நிறைவுற்றது.



