
புத்ராஜெயா, மார்ச்-24-RON95 எரிபொருள் மானியத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு வைரல் சம்பவத்தில், இனியும் மானியப் பெட்ரோலைப் பெற முடியாதவாறு, கார் உரிமையாளரின் MyKad அடையாள அட்டையை தற்காலிகமாக முடக்குவதாக நிதி அமைச்சான MoF அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், ஒரு ஜோடி RON95 பெட்ரோலை சுமார் RM230 ரிங்கிட்டுக்கு நிரப்பியது.
முதலில் எரிபொருள் கொள்கலன்களிலும் பின்னர் கார் டாங்கியிலும் இருவரும் எண்ணெய் நிரப்பினர்.
இச்சம்பவம் ஜோகூர், ஸ்கூடாயில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அதிக அளவில் மானிய பெட்ரோலை நிரப்பியது, எரிபொருள் மானியத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயல் என அறிக்கையில் சுட்டிக் காட்டிய MoF, இது போன்ற பொறுப்பற்றவர்களுக்கு எதிராக அமுலாக்க நடவடிக்கைப் பாயும் என்றது.
மேற்காசிய நெருக்கடியால் ஏற்கனவே எரிபொருள் விலைகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதை உறுதிச் செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலையில், மானியத்தில் கசிவு ஏற்படுவதையும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அரசாங்கம் பொறுத்துகொள்ளாது என நிதியமைச்சு எச்சரித்தது.



