
புது டெல்லி, ஜூலை-4 T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணி, நாடு திரும்பிய கையோடு மரியாதை நிமித்தம் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளது.
கேப்டன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையில் அவ்வணி, புது டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது.
தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
உலகக் கிண்ண வெற்றியானது, அடுத்தடுத்தப் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவிக்க ஓர் உத்வேகமாக அமையட்டும் என வாழ்த்திய மோடி, முக்கியப் போட்டிகளில் இனி பட்டம் வெல்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
உலகக் கோப்பையை மோடி கையில் கொடுத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்ட அவர்கள், குழுப்படமும் எடுத்துக் கொண்டனர்.
மேற்கு இந்தியத் தீவான பார்படோசில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா, தென் ஆப்ரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியனானது.
இன்று பின்னேரம் பிரமாண்ட வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.