
புத்ராஜெயா, ஜூலை-5 – வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.
அதில் உள்துறை அமைச்சுடன் இணைந்து பணியாற்றுமாறு JAKIM எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, YADIM எனப்படும் மலேசிய இஸ்லாமிய பிரச்சார அறக்கட்டளை ஆகியவற்றுக்கு, இஸ்லாமிய சமய விவகார அமைச்சர் டத்தோ நாயிம் மொக்தார் அறிவுறுத்தியுள்ளார்.
உள்துறை அமைச்சுக்கும் இஸ்லாமிய அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தம் பரவுவதைத் தடுக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும் இதில் ஈடுபடவில்லை என்றாலும், தீவிரவாத தாக்கத்தின் அபாயத்தை நாம் கையாள வேண்டும் என்றார் அவர்.
தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் எந்தவொரு சித்தாந்தத்தையும் மலேசியா கடுமையாக எதிர்க்கும்; இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை என டத்தோ நாயிம் கூறினார்.
கடந்த வாரம் கைதுச் செய்யப்பட்ட வெளிநாட்டினர், மலேசியாவில் தொழிற்சாலைகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கட்டுமான தளங்களில் குடியேறிய தொழிலாளர்களிடமிருந்து, IS அமைப்புக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தது அம்பலமானது குறிப்பிடத்தக்கது.