Latestஇந்தியா

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு; ‘கிங் மேக்கராகும்’ TVK; அதிரடி கருத்துக் கணிப்பு முடிவுகள்

சென்னை, ஏப்ரல்-30-தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

முன்னணி நிறுவனங்களின் கணிப்புப்படி, தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியே ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

8 கருத்துக் கணிப்புகளில் 5 கருத்துக் கணிப்புகள் திமுவே ஆட்சிமைக்கும் எனக் கூறுகின்றன

குறிப்பாக, அதிகபட்சம் 170 தொகுதிகள் வரை கைப்பற்றி திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் JVC நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக 147 இடங்கள் வரை வென்று ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிகபட்சம் 26 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்தையே பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், ஒரே ஒரு கருத்துக் கணிப்பு மட்டும் விஜய் முதல்வராவார் என கணித்துள்ளது.

Axis My India நிறுவனத்தின் ஆய்வின் படி, விஜயின் TVK 120 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிகிறது.

காமக்யா என்ற நிறுவனம் நடத்தியக் கருத்துக் கணிப்பு மட்டும் யாருக்கும் தனிப்பெரும்பான்மைக் கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் ஏற்படலாம் எனக் கூறியுள்ளது.

அப்போது 81 தொகுதிகள் வரை வென்று TVK அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் King Maker அதாவது துருப்புச் சீட்டாக மாறும் என்றும் அது கூறியுள்ளது.

கள நிலவரப்படி, இந்தத் தேர்தலில் திமுக – அதிமுக இடையே நேரடிப் போட்டியும், TVK மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் மூன்றாவது இடத்தைப் பிடிக்க கடும் போட்டியில் உள்ளதும் தெளிவாகியுள்ளது.

வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கணிப்புகள் உண்மையாகுமா என்பது அன்று தெரியவரும்.

எத்தனையோ தேர்தல்களில் கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போயிருப்பதால், அரசியல் கட்சிகள் நம்பிக்கைத் தளராமல் மே 4-ஆம் தேதிக்குக் காத்திருக்கின்றனர்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!