
மலாக்கா, மார்ச் 26- தனது மனைவியை தாக்கியதாக இரண்டு குற்றங்களை ஒப்புக்கொண்ட முகமட் அய்டில் ரஹ்மாட் (Muhammad Aidil Azahar Rahmat) என்ற 22 வயது நபருக்கு 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது .
பொருட்களை பட்டுவாடா செய்யும் வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் முகமட் அய்டில் 20 வயதான மனைவி நூர் அஸிமா அப்துல் ரசாக்கின் தலையின் பின்புறத்தில் குத்தி, வேண்டுமென்றே அவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக முதலாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
மாஜிஸ்திரேட் நூர் அபிகா ( Nur Afiqah ) முன்னிலையில் வாசிக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார். மார்ச் 15 ஆம் தேதியன்று அதிகாலை மணி 3.59 மற்றும் 4.06 மணிக்கிடையே ஜாலான் KPKS 4, கோத்தா ஷா பண்டார் 1, வணிக வளாகத்தில் கரோக்கே மையத்தின் உள்ளேயும் வெளியிலும் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும் மனைவியின் முகத்தில் அறைந்தது, தலையில் தாக்கியது மற்றும் கீழே விழும் வகையில் அவரை தள்ளியதாக முகமட் அய்டில் மீது இரண்டாவது குற்றஞ்சாட்டு கொண்டுவரப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் 323 ஆவது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 326 A பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா நான்கு மாதங்கள் என 8 மாதம் சிறைத்தண்டனையை முகமட் அய்டிலுக்கு விதிக்கப்பட்டது.
எனினும் இந்தத் தண்டனைகளை , மார்ச் 19 ஆம்தேதியன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஏகா காலத்தில் நிறைவேற்றும்படி முகமட் அய்டிலுக்கு மாஜிஸ்திரேட் நூர் அபிகா உத்தரவிட்டார்.



