
மூவார், நவம்பர்-17,இரப்பர் மரம் சீவி, வறுமையில் 11 பிள்ளைகளை வளர்த்த ஒரு தாயின் குடும்பத்தில் இன்று 45 மருத்துவர்கள்…
ஜோகூர், மூவாரைச் சேர்ந்த லூ சியூ சின் (Loo Siew Chin) என்ற அந்த மூதாட்டி, தனது 104-ஆவது வயதில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இரங்கல் அறிவிப்பே, தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முறையான பள்ளிக்கல்வியே இல்லாத லூவும் அவரது கணவரும், இரப்பர் மரம் சீவி பால் வெட்டித் தங்களது 11 பிள்ளைகளையும் வளர்த்தனர்.
குடும்ப வறுமையால், பிள்ளைகளும் வார இறுதிகளில் சந்தைகளில் காய்கறிகளைக் கழுவியும் மீன்களைச் சுத்தம் செய்தும் 1 முதல் 2 ரிங்கிட் வரை சம்பாதித்துள்ளனர்.
இருந்தாலும், பிள்ளைகளின் கல்வியில் அந்த ஏழைப் பெற்றோர் குறை வைக்கவில்லை.
இந்நிலையில், தனது பிள்ளைகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தால், மூத்த மகன் 1964-ஆம் ஆண்டு இந்தியாவில் மருத்துவம் பயிலச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து மேலும் 7 சகோதரர்களும் மருத்துவர்களாகினர்.
இன்று அந்தக் குடும்பத்தில் 20 நிபுணத்துவ மருத்துவர்கள் உட்பட மொத்தம் 45 மருத்துவர்கள் உள்ளனர்.
அவ்வகையில், லூவின் இரங்கல் செய்தியில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப் பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்னால் வரிசையாக ‘Dr’ என இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
வறுமையிலும் பிறருக்கு உதவும் மனப்பான்மையைக் கைவிடாத லூ, வீட்டுக்கு வரும் யாரும் பசியுடன் திரும்பக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார்.
தனது பரம்பரையும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி வந்ததாக குடும்ப உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுக்கூர்ந்தனர்.
கல்வி, கடின உழைப்பு, மனிதநேயம் ஆகியவற்றால் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்ற முடியும் என்பதற்கு லூவின் வாழ்க்கை ஓர் உதாரணம்…



