
நீலாய், செப்டம்பர் 21 – நீலாய் அருகே வடக்கு–தெற்கு விரைவுச்சாலையில் ஆபத்தான முறையில் ப்ரோட்டான் வீரா காரை ஓட்டி சென்று, பெரோடுவா ஆக்சியாவை நெருக்கமாக இடித்துச் சென்ற 35 வயது ஓட்டுநர் சிலாங்கூரில் கைது செய்யப்பட்டார்.
பூச்சோங்கிலுள்ள அவரது வீட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் போலீசார் அந்நபரை கைது செய்தனர்.
விசாரணையில், பொருள் விநியோகப் பணியாளரான அவருக்கு குற்றப் பதிவு இல்லை என்றும், ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாக இருப்பதும் தெரியவந்தது. எனினும், அவர் பயன்படுத்திய வாகனத்தின் சாலை வரி மற்றும் காப்பீடு கடந்த மே மாதமே காலாவதியாகியிருந்தது.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் ஆக்சியா வாகனம் சுழன்று சாலையோரம் சென்றபோதும், அதன் ஓட்டுநருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.



